கடவுள்

எழுத்தாளர் : சி.டிசாந்த்மின்னஞ்சல் முகவரி: dishanth2008@gmail.comBanner

கடவுள் ஒரு கருப்பொருள். அது மனித தேவைகருதி மனித வாழ்வியல் அனுபவங்களோடு மனிதனால் உருவாக்கப்பட்டது என்பது என் பதின்மகாலத்திலிருந்ததான புரிதல். நான், கடவுள் எனும் கருப்பொருளை ஆணித்தரமாக இன்றும் நம்புக்கிறேன். இப்பொழுதும் என் தேவைகள் நிறைவடையவில்லை எனில் அடிக்கடி கடவுளைத் தேடி அலைகிறேன், கடவுளிடம் நீண்ட நேரம் புலம்பிதள்ளுகிறேன், இடையிடையே சபித்தும் விடுகிறேன். ஆனால் கடவுள் ஒரு நாளும் என்னிடம் கோவித்து கொள்வதில்லை அல்லது நான் புலம்பித் தள்ளியதனைத்தையும் சொடுக்கில் சரிசெய்வதுமில்லை. அது எனக்கு தெரியும். எனக்கு தெரியும் என்பதும் அவருக்கு தெரியும். ஏன் நானே முகத்துக்கு நேராக சொல்லி பேசியும் இருக்கின்றேன். இருப்பினும் நான் கடவுளை நம்புகின்றேன். அதுவும் அவருக்கு தெரியும் என்பதையும் நான் நம்புகின்றேன். தொடர்ச்சியான நம்பிக்கைகள் புலம்பல்களால் எனக்கு எதுவும் கிடைத்து விட போவதில்லை, இருப்பினும் நான் புலம்புகிறேன். புலம்புவதற்கு என்னிடம் ஒரே ஒரு நாக்கு இருக்கிறது. ஆனால்  கேட்பதற்கு அவரிடம் அதிகளவு காதுகள் இருக்கின்றன என நம்புகிறேன். புலம்பல்களின் இறுதியில் எஞ்சுவது மனதில் இருந்த பெரும்சுமை இலேசதனாய் உணர்தல் மட்டுமே. அதுவே எனக்கு போதுமானதாய் இருந்தது. ஆதலால் நான் புலம்புவதை நிறுத்த போவதில்லை. 

நான் சின்னனில பள்ளிக்கூடம் போயிட்டு வீட்ட வாறது ஒரு சுடலை பாதைக்குள்ளால, அது ஒரு குளத்து பண்டு. சுத்தி வர நல்ல பாதை இருக்கு ஆனால் அது தூரம், நடந்து போய் நடந்து வாறதுக்குள்ள சீவன் போயிடும். சுடலை பாதையால வாற சிக்கல் என்ன எண்டால் பேய் பயம். பேய் எண்டால் யாருக்கு தான் பயமில்லை. பேய், பிசாசு, கொல்லிவாய் பிசாசு, முனி, மோகினி, குட்டிச்சாத்தான், இரத்தக்காட்டேரி, இந்த லிஸ்ட்டில சரண்ராஜ் கடைசியா சேர்த்த கோழிகுஞ்சு பேயோட மொத்தம் 8 வகை. 

தங்கட வீட்ட அடைக்கிருந்த கோழியின்  முட்டையை தூக்கி பார்க்கேக்க அது வெறுமையா பாரமில்லாமல் இருக்கு எண்டு சரண்ராஜ் உடைச்சு பார்த்துருக்கான். அது வெறும் கோது உள் எதுவும் இல்லை. அண்டைக்கு இரவே இவன் மூத்திரம் பெய்ய முத்தத்துக்கு போகேக்க வெள்ளை வெளீர் என கோழிகுஞ்சு ஒண்டு வாயால ரத்தம் ஒழுக அந்தரத்தில நிண்டதம். அதை பார்த்த சரண்ராஜ்க்கு பயத்தில காச்சட்டையோட மூத்திரம் போயிட்டு. கோழிகுஞ்சு போய்கதை சொல்லேக்க கண்களை மேலே சொருகி நாக்கினை வலது புறம் வாயிடுக்கின் மூலம் வெளிதள்ளி தலையயும் சரித்து வலது தோளில் வைத்து கைகாளிரண்டையும் பக்கவாட்டில் வைத்து நடித்தும் காட்டுவான். வகுப்பு பொடியல் போடா டேய் புளுகுண்ணி எண்டு சத்தம் போட்டால் இந்தா இவனிருக்கன் சுடலைக்காலபோறவன் எப்புடியும் காண்டிருப்பான் 'என்ன காண்டனியெல்லா மச்சான்'என துணைக்கழைப்பான் எனக்கோ அவனுக்கு இரவில பயத்தில போன மூத்திரம் பகலிலையே போயிடும் போல இருக்கும். 

இந்த லிஸ்ட்டில எந்தப் பேய் தட்சணாங்குளம் இந்து மயானத்தில இருக்கோ அது எப்ப வந்து என்னை பிடிக்கும் அதுக்கு என்ன என்ன மாற்று வழிகள் செய்யலாம் என பல ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கிறேன். இரும்பாணிவைச்சுருந்தா பேய் பக்கதிலையும் வராது, விபூதி பூசினா சரி, பேய நேர கண்ணுக்கு கண் பார்க்க கூடாது, என அவனவன் தன் வாயில வாற எல்லாத்தையும் அடிச்சு விட்டுட்டு இருப்பானுங்கள். ஆனால் பிரச்சனை எனக்குதானே நான் தானே சுடலைக்குள்ளால போறன் அவனுகளில்லையே. குளத்து பண்டில ஏறமுதல் நான் எல்லாத்தையும் சரி பார்த்து கொள்வேன். பொக்கற்றுக்குள்ள ஆணி இருக்கா விபூதி பூசியிருக்கனா கையில விபூதி இருக்கா எண்டு. கையில விபூதி வைச்சுருக்கிற சரண்ராஜ் சொல்லிதந்த இன்னுமொரு டெக்கினிக். விபூதியை பேய் வந்தா அதுண்ட மூஞ்சில அடிச்சா பேய் செத்து போயிடும். இதை நீ ரகசியமா வைச்சுரு யாருட்டயும் சொல்லகூடா எண்ட டெக்கினிக் இது எண்டு சத்தியமும் வாங்கிகொண்டான். 

சுடலை, குளத்தோட இருப்பதால் அங்கு பற்றைக்காடுகள் அதிகம். பற்றைகள் திட்டு திட்டாய் வளர்ந்திருக்கும் அவை என்னை விட இரண்டு மடங்கு உயரம் கொண்டது. ஆனால் ஒரு பெரும்சமவெளியில் பற்றைகாடுகள் இடையிடையே நிறைய இடைவெளிகள் என அழகாயிருக்கும். அங்கு மயில்கள் அதிகம். அவை அங்குமுட்டையிட்டு அடைகாத்து குஞ்சு குருமான்களுடன் மேய்ந்து கொண்டு திரியும். பெண்மயில்கள் குஞ்சுகளில் அதிக கவனம் கொண்டவை. யாரேனும் மனித நடமாட்டம் தென்பட்டால் கத்த தொடங்கிவிடும். அதன் குரல்கா..கா..கா.. என்று காகம் போல் அல்லாது குறுக்கிய ஸ்தாயில் தொடங்கி பெரிய ஸ்தாயிக்கு போய் மீண்டும் குறுகிய ஸ்தாயில் வந்து முடிவுறும். அந்த குளபண்டில் மயில்களின்  சத்தம் தான் எனக்கு அதிக பயம் தருவது. அந்த சத்தம் என்ன தொடை நடுங்க வைக்க நான் விபுதியை எல்லா திசைகளிலும் எறிய தொடங்கிவிடுவேன். பண்ட் பாதிவழியிலேயே விபூதி முடிந்துவிடும்.பின்பு பாதி தூரம் விபூதி இல்லாமல் நடக்கவேண்டி வரும். ஏதோ ஒருபயம் என்னை முழுதாக சூழ்ந்துகொள்ள ஓட தொடங்குவேன். ஓடி கால் வலிக்கையில் ஓ என கத்தி அழுதும் இருக்கிறேன். பின்பு விபூதி முடிஞ்சுட்டு எண்டா என்ன செய்யலாம் என் நானும் சரண்ராஜ்யும் பல நாள் ஜோசித்து சரண்ராஜ் அவன் கோவில் நண்பர்களிடமெல்லாம் ஆலேசித்து ஒரு தீர்வை கொண்டுவந்தான். விபூதிமுடிஞ்சுட்டு எண்டா ஓடு, திரும்பி பார்க்காமல் ஓடு, ஓடிட்டு இருகேக்க ஸ்கூல் பாக் யாரும் பிடிச்சு இழுக்குறமாரி இருந்தா ஒண்டும் யோசிக்காம காச்சட்டைய கழட்டிடு அம்மணகுண்டியா நில்லு பேய்க்கு வெக்கம் வந்து ஓடிபோயிரும் எண்டான். அம்மணகுண்டியா நிக்குறத கேக்கவே எனக்கு வெக்கமாய் இருந்துச்சு இருந்தாலும் என்ன செய்யுற ஆத்தா கட்டத்தில அது இருக்கட்டும் எண்டு விட்டுடன். 

அடுத்தநாள் பாண்டில ஏறேக்க சுடலைக்குள்ள பிரேத எரியுறத தூரத்துல இருந்தே கண்டுடன். சுடலையில யாரும் இருக்கல. மயில்களும் அமைதியாய் இருந்தன. ஏதோ ஒரு நடுக்கம் என்னை சூழ்ந்து கொண்டது. விபூதியை கையில கொஞ்சம் உண்டன எடுத்து ஆட்காட்டி விரலை நீட்டி பிடித்து பெருவிரலுக்கும் மற்றை மூன்று விரலுக்குமிடையே பொத்தி பிடிசச்சன் மிச்ச விபூதி பொக்கற்றுக்குள்ள இருந்துச்சு. காவாசி பண்ட்கடக்கேக்க முதலாவது மயில் கத்த தொடங்கிச்சு விபூதியை சுற்றும் எறிந்தேன். இரண்டாவது மயில், மூண்டாவது மயில், நான்காவது மயில் பின்பு இரண்டாவதாய் கத்திய மயிலின் எதிரொலி என அதிகளவு மயில்சத்தம் அழுகை வந்துவிட்டது. நான் நிறைய அழுதேன். முதலாவது மயில் திருப்ப சத்தமிட தொடங்கையில்நான் பாதி பண்ட் தாண்டிருந்தேன்.இனி விபூதி வேலைக்காவாது என ஓட ஆரம்பித்தேன். பண்ட் முடியும் இடத்தில ஒரு சிமெந்து சுவர் கட்டியிருந்தாங்கள். சுவர் தான் சுடலையிண்ட முன் மதில். அதுக்கு அங்காலவீடுகள் குடியிருப்புகள் எல்லாம் இருக்கு இப்பொழுது நான் ஓடுவதாயின் அந்த சுவர் வரை ஓட வேண்டும். நான் தூரத்தில் ஓடிவருவதை நிரோசன் அண்ணா கண்டுவிட்டர். அவர் என்னைவிட நான்கு வகுப்புகள் அதிகம் எங்கட பள்ளிகூடத்தில தான் படிக்கிறர். நாங்கள் எல்லாரும் பின்னேரம் செட்டா சேர்ந்து கிரிகட் விளையாடுறது வழக்கம். நான் ஓடி வாறத கண்டுட்டு நிரேசண்ணா மதிலுக்கு பின்னால வந்து ஒளிஞ்சுட்டு நிண்டும்...ம்ம்ம்ம்ம்ம்... எண்டு சத்தம் போட்டார். எனக்கோ வயித்த கலக்க வெளிக்கிட்டு ஐய்யோ எண்டு கத்திகொண்டு ஓடினேன் அண்ணா நில்லு எண்டு எண்டா பாக்கை பிடித்து இழுத்தார். நான் சடாரென கழுசாணை கழட்டி விட்டு அம்மணக்குண்டியாய் ஒப்பாரி வைக்க ஆரம்பித்தேன். 

நிரேசண்ணா முதுகில் தட்டி அடேய் நான் தண்டா என்ன பயந்திட்டியா எண்டு கேட்ட பிறகு நான் இன்னும் பலமா அழுதேன். என் இயலாமைகளை நினைத்து அழுதேன், வெட்டவெளியின் இவ்வளவு வெளிச்சத்தில் நான் ஆதரவற்று போனதை நினைத்து அழுதேன், நிரேசண்ணா முன் அம்மணக்குண்டியாய் நிண்டதை நினத்து வெக்கி அழுதேன். அழுதழுது களைத்து மூச்சடக்கியும் நான் விக்கி விக்கி மூக்குசளியை துடைத்து அழுதேன். நிரோசண்ணா வீடு வரை வந்தார். பேய் இல்லை எண்டு சொன்னார் ஆம்பிளப்பொடியன் இப்படியா இருக்கிறது என போசினார் பேயெல்லாம் பொய்கதை எண்டு நம்பிக்கை தந்தார் என் அழுகை கொஞ்சம் குறைந்தது. பின்புநான் அம்மணக்குண்டியாய் நிண்டதை பின்னேரெம் கிறிக்கட் மட்சில சொல்லி எல்லேரும் சிரிக்க போறங்களே எண்டது நினைவுக்குவர நான் மீண்டும் விக்கி விக்கி அழுதேன். நிரேசண்ணா அம்மாவிடம் நடந்ததை சொன்னார். அம்மம்மா என்னை வாரி அணைத்து கொண்டார் சாமி அறைக்குள்ள கூட்டி போய் எதோமந்திரமெல்லாம் சொன்னார் கற்பூரம் காட்டினார். பின் சாமி ஆடத்தொடங்கினார் அம்மம்மாக்கு அம்மாளச்சி உடம்பில வந்து போடவா எண்ட அம்மா அடிக்கடி சொல்லியிருக்கா. ஆனா நான் பாத்ததில்லை. அம்மம்மா தலையை விரித்து தலைமயிரை சுத்தி சுத்தி ஆடினா. தன் தலையை கொண்டுவந்து என உடம்பொல்லாம்தேய்த்தார். குஞ்சு.. குஞ்சு ..ஒண்டுக்கு கவலைப்படாதா.. சரியா... எண்டார். நானிருக்கன் உனக்கு. இனி ஏதும் எண்டால் ஓம் நமச்சிவாய எண்டு சொல் சரியா நான் வருவன்.. நீ எப்ப கூப்பிட்டாலும் சரியா எண்டார். எனக்கு அம்மம்மா அம்மாளாச்சியாய் தெரிந்தார் காலில் விழுந்து கும்பிட்டேன் கற்பூரதட்டில் இருந்து கொஞ்சவிபூதியை எடுத்து நெற்றியில் பூசிவிட்டார். 

அடுத்த நாளிலிருந்து மயில் கத்த தொடங்க ஓம் நமச்சிவாய என நானும் கத்த தொடங்கினேன். மயிலுக்குமேலாக சத்தமாய் கத்தினேன். என் குரலிம் நடையிலும் நம்பிக்கையை ஓம் நமச்சிவாய மந்திரம் தந்தது. நடந்து செல்கையில் ஏதும் சத்தம் வந்தால் அந்த திசைபார்த்து ஓம் நமச்சிவாய எண்டு கத்தினேன். பற்களை நறும்பிகைகளை இருக்கி பொத்தி சண்டைக்கு வாறியா எண்டு பேயினை கேட்பது போல் ஓம் நமச்சிவாய என உச்சரித்தேன். அந்த சொல் என்னுள் ஒரு அசூர நம்பிக்கையை வளர்த்தது. நான் கடவுளை முழுமையாய் உணர்ந்தேன். கடவுளிடம் என்னை முழுமையாய் சரணதி கொடுத்தேன்.


        
Views: 878